மடிப்பாக்கம் பாதாள சாக்கடை தொடர்பான உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் நாளை ேநரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை பணிகளை நிறைவேற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நாளை ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அய்யம்பெருமாள் என்பவர் 2019ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி சாலைகளில் வடிகிறது. இதனால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை அமைக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

  இந்த வழக்கில், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தரப்பில், டெண்டர் பணிகளை முடிக்க 6 மாதமும், அதன்பின்னர் 36 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்ற நீதிமன்றம், பாதாள சாக்கடை பணிகளை 2020ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் முடிக்கப்படவில்லை என்பதால் கடந்த ஆண்டு அய்யம்பெருமாள் உயர் நீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் வகுப்பதுடன், அவற்றை செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை முடிவு செய்யும் அரசு, அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் திட்டங்களை செயல்படுத்தி முடிப்பதில்லை. நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அதில் உத்தரவு பிறப்பித்தாலும் செயல்படுத்துவதில்லை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதற்கும், அரசு துறைகளின் செயல்பாடுகளுக்கும் அந்தந்த துறைகளில் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிக்கும் செயலாளர்களே பொறுப்பாவார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் விசாரணைக்கு வரும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களுக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்படும். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பொறுத்தவரை இனி யாருக்கும் தயவு காட்ட மாட்டோம். இந்த வழக்கில் நிதித்துறை செயலாளர் ஆஜராகியுள்ளார். அவர் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுத்த விசாரணையின்போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Related Stories: