செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற உணவுகளை தயாரிக்கும் ஜெர்மன் பெண்!

ஒவ்வொரு உயிரினங்களும் வாழ உணவு அவசியம். நாம் சாப்பிடும் அதே உணவுகள் நம் வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளுக்கு கொடுக்க முடியாது. காரணம் அவர்களின் உடலமைப்பும் மற்றும் செரிமான தன்மை வேறுபடும். செல்லப்பிராணிகளுக்காகவே பிரத்யேக உணவினை தயாரித்து வருகிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஜுலியா பேப். ‘‘எனக்கு சின்ன வயசில் நாய் வளர்க்கணும்ன்னு ஆசை. அம்மாவிடம் சொல்ல பராமரிப்பு மற்றும் உணவு முறைகளை பற்றி தெரிந்துக் கொண்டு பிறகு வளர்க்கலாம்ன்னு சொல்லிட்டாங்க. அதற்காகவே நான் அதன் உணவு மற்றும் பராமரிப்பு குறித்து முறையாக கற்றுக் கொண்டேன்.

13 வயசில் ஜானி என்ற நாயை தத்தெடுத்தேன். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல நேர்ந்தது. அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனதால், ஜானியை வேறு ஒருவருக்கு தத்துக் கொடுத்திட்டாங்க. நான் படிப்பு முடிச்சிட்டு வருவதற்குள் ஜானி உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் அதற்கு கொடுக்கப்பட்ட உணவு என்று தெரியவந்தது” என்ற ஜுலியா செல்லப்பிராணிகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய உணவின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று முடிவெடுத்தார்.

‘‘திருமணமாகி நான் இந்தியா வந்த கையோடு முதலில், ஒரு நாயை தத்தெடுத்தேன். கடைகளில் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தான் செல்லப்பிராணிகளுக்காக விற்கப்படுகிறது. அவர்களுக்கான பிரஷ் இறைச்சி உணவுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் என்னுடைய நாய்க்கு பண்ணையில் இருந்து நல்ல இறைச்சியினை வாங்கி கொடுக்க ஆரம்பிச்சேன். அவனும் ஆரோக்கியமாக வளர்ந்தான். அப்போது தான் இதையே ஏன் நாம் தொழிலாக மாற்றக்கூடாதுன்னு தோன்றியது. அப்படித்தான் ‘கேனைன் இந்தியா’ உருவாச்சு.

இதில் முழுக்க முழுக்க இறைச்சி மற்றும் எலும்பு போன்றவை மட்டுமே இருக்கும். சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் எதுவும் கலப்பதில்லை.  நாய் மற்றும் பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு சமைக்கப்படாத இறைச்சியே சரியான உணவு. நம்மை போல் விலங்குகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் செரிமானம் ஆகாது. செல்லப்பிராணிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவைக் கொடுக்கவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை இறைச்சி பொருட்கள் சென்சிடிவாகவே பார்க்கப்படுகிறது. அதனால் செல்லப்பிராணிகளுக்கு சரியான உணவு வகைகளைக் கொடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துறைத்து வருகிறேன். மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை அதிகம் நேசிக்கிறார்கள்.

அதற்கு எது நல்லது என்பதை உணர்ந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்” என்ற ஜுலியாவின் எதிர்கால திட்டம், செல்லப்பிராணிகளுக்கு வெவ்வேறு வகையான உணவுகளை தயாரித்து வழங்க வேண்டும் என்பதாம்.

>