கேரளாவில் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்றும் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு நேற்று ஒரே நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று திருவனந்தபுரம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பலத்தை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நேற்றிரவு முதல் திருவனந்தபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை விட வடமாவட்டங்களில் தான் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பலத்த மழை காரணமாக நேற்று ஒரே நாளில் கேரளாவில் 4 பேர் பலியானார்கள். இடுக்கி ஏலப்பாறையில் நேற்று அதிகாலை வீட்டின் மீது மண் சரிந்து பாக்கியம் என்ற பெண் இறந்தார். இதேபோல செங்குளம் அருகே முதலான்குடியில் கட்டிட பணி நடந்து கொண்டிருந்தபோது மண் சரிந்து பவுலோஸ் (52) என்ற தொழிலாளி இறந்தார்.

கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி அருகே தென்னை மரம் விழுந்து பைக்கில் சென்ற அஷ்வின் தாமஸ் (20) என்பவர் இறந்தார். கண்ணூரில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தம்பாயி என்ற முதியவர் மரணமடைந்தார்.

பிற்பகல் 2 மணிக்கும், இரவு 10 மணிக்கும் இடையே பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: