தச்சநல்லூரில் சந்திமறித்தம்மன் கோயில் அருகே சாலையோரம் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்-விரைவில் அகற்றி சீரமைக்கப்படுமா?

நெல்லை : தச்சநல்லூரில் சந்திமறித்தம்மன் கோயில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் குவிந்து கிடக்கும் மணலால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, மணலை உடனடியாக அகற்றுவதோடு உருக்குலைந்துள்ள  சாலையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படுமா? என அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

 நெல்லை மாநகராட்சி, தச்சநல்லூர் மண்டலம், 1வது வார்டு பகுதியில் பிரசித்திபெற்ற தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றியுள்ள சாலையில் கடந்த  சில நாட்களுக்கு முன்னர் பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் ராட்சத குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. குழாய் பதிப்பு பணி நிறைவடைந்த பிறகும், இதற்காக தோண்டிய குழியானது முறையாக மூடப்படவில்லை.

இதனால் இங்குள்ள சாலையோரம் மணல் குவிந்து கிடப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது. மேலும் இத்தகைய ராட்சத குழாய் பதிக்கும் பணியின் காரணமாக சந்திமறித்தம்மன் கோயிலைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளும், தச்சநல்லூரில் இருந்து தாராபுரம் வழியாக தாழையூத்து செல்லும் சாலைகளும் குண்டும் குழியுமாக முற்றிலும் உருக்குலைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 தினமும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் உருக்குலைந்து காணப்படும் இச்சாலையைத்தான் கடந்து செல்ல வேண்டி உள்ளது. இதே போல் உள்ளூர் மக்களும் சந்திமறித்தம்மன் கோயில், அதைச் சுற்றியுள்ள பல்வேறு கடைகள், வங்கி, பள்ளிக்கூடம், அஞ்சலகம் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இச்சாலையை கடக்க வேண்டி உள்ளது. மேலும் தேனி, கம்பம், போடி, ராஜபாளையம், வில்லிபுத்தூர், சங்கரன்கோவில் போன்ற வெளியூர்களில் இருந்து தேவர்குளம், மானூர், அழகியபாண்டியபுரம், ராமையன்பட்டி வழியாக நெல்லை வந்துசெல்லும் வாகனங்களும் இச்சாலையை தினமும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. மேலும் கரையிருப்பு, தாழையூத்து, சங்கர்நகர்,  தென்கலம், நாஞ்சான்குளம், ராஜவல்லிபுரம், பாப்பையாபுரம் உள்ளிட்ட நெல்லை சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் இச்சாலைகளுக்கு செல்லும் பஸ்களும் செல்கின்றன.

 இவ்வாறு முக்கியத்துவமிக்க இச்சாலையோரம் மணல் குவிந்து கிடக்கும் நிலையில் தற்போது பலமாக வீசும் காற்றால்  சாலையோரம் குவிந்துள்ள மணல் உள்ளிட்ட தூசுகள் காற்றில் பறந்து வருகின்றன. இவை வாகனஓட்டிகளின் கவனம் சிதறுவதோடு விபத்து அபாயமும் நிலவுகிறது. இதன்காரணமாக இச்சாலையை கடந்துசெல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

 எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தனிக்கவனம் செலுத்துவதோடு சாலையோரம் குவிந்துக் கிடக்கும் மண்ணை அகற்றவும், குண்டும், குழியுமாக உருக்குலைந்துள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து கொடுக்கவும் முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: