திருவள்ளூர், பெரியபாளையத்தில் அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்

திருவள்ளூர்: திருவள்ளூர், பெரியபாளையத்தில் உள்ள அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டம் இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். திருவள்ளூர் வி.எஸ்.நகர் ஐவேலி அகரத்தில் உள்ளது அன்னை மகா பிரத்யங்கிரா தேவி கோயில். இந்த கோயிலில் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில், இந்த கோயிலில் 3 நாட்கள் நடைபெற்ற ஆனித்திருவிழாவின் முதல் நாளான கடந்த 1ம் தேதி வெள்ளிக்கிழமை பால்குட ஊர்வலம் மற்றும் மகா தீபாராதனை, மாலை திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து 2ம் நாளான சனிக்கிழமை மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, மாலை பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் அலகு தரித்து ஊர்வலமும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை கலசாபிஷேகமும், அம்மனை வர்ணித்து கூழ் அமுது படைத்தலும் நடந்தேறியது. பின்னர் இரவு பக்தர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பதால் தீமிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பிறகு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தபோது சிலம்ப கலை நிகழச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ஐவேலி அகரம், தலக்காஞ்சேரி, திருவள்ளூர், ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரியபாளையம்: எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் அருகே உள்ள மாகரல் கண்டிகை கிராமத்தில் பொன்னியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பொன்னியம்மன் ஆலய திருவிழா கடந்த 21ம் தேதி தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் ஆராதனை செய்யப்பட்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து கூழ் வார்த்தல், பெண்கள் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்தல், கும்பம் படைத்தல், அம்மன் மாலை திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 24ம் தேதி திரவுபதி அம்மன் கோயிலில் தர்மராஜாதூவாரோஜன் ஸ்தம்பம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி அன்று கிராமத்தைச் சேர்ந்த 105 பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணியளவில் பகாசூரன் சம்ஹாரம், பாஞ்சாலி அர்ஜுனன் திருக்கல்யாணம் சீர்வரிசியோடு நடைபெற்றது. அம்மன் திருவீதி உலா, நச்சுக்குழி யாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காப்பு கட்டி 10 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் புனித நீராடினர். இதில் உற்சவர் பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு புனித நீராடிய பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: