சாதி பெயரை சொல்லி திட்டி மனைவியை தாக்கிய பாஜ நிர்வாகி கைது

திருப்பத்தூர்: காதல் திருமணம் செய்த 11 மாதத்தில் மனைவியை கொடுமைப்படுத்தி தாக்கிய அவரது கணவரான பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூரைச் சேர்ந்தவர் சீனிவாசன்(38), வக்கீல். இவர் திருப்பத்தூர் மாவட்ட பாஜ வழக்கறிஞர் பிரிவின் தலைவராக உள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன், தர்மபுரியை சேர்ந்த ரவிசந்திரன் மகள் ரக்‌ஷிகா(25) என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்துள்ளார்.

திருமணமான சில நாட்களில் இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரக்‌ஷிகாவை சீனிவாசன் அடிக்கடி துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் சீனிவாசன், ரக்‌ஷிகாவை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவலறிந்த ரக்‌ஷிகாவின் தந்தை ரவிசந்திரன், மின்னூர் வந்து, காயமடைந்திருந்த தனது மகளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இதுகுறித்து திருப்பத்தூர் எஸ்பியிடம் ரவிசந்திரன் புகார் தெரிவித்துள்ளார். எஸ்பி உத்தரவின்பேரில் நேற்று ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் உள்ளிட்ட போலீசார் மின்னூர் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சீனிவாசன் தொடர்ந்து பணம் கேட்டு ரக்‌ஷிகாவை துன்புறுத்திய நிலையில் ரூ. 5 லட்சம் தந்ததாகவும், ரக்‌ஷிகாவை ஆபாசமாகவும், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் தாலுகா போலீசார் சீனிவாசனை நேற்று கைது செய்தனர்.

Related Stories: