கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மிரட்டும் மாடுகள்: பதறும் மக்கள்

அண்ணாநகர்: கோயம்பேடு மெயின் ரோடு, மார்க்கெட் சாலைகளில் எருமை மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், பூந்தமல்லி செல்லக்கூடிய பிரதான சாலையில் தினமும் காலை முதல் மாலை வரை எருமை மாடுகள் கூட்டம், கூட்டமாக செல்கின்றது.

இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் குவிந்துகிடக்கும் அழுகிய காய்கறிகள், பழங்கள் பூக்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்காக ஏராளமான எருமை மாடுகள், பாடிக்குப்பம் பகுதியில் இருந்து கோயம்பேடு அங்காடி வளாகத்துக்கு வருகிறது. இவ்வாறாக வரும் மாடுகள், கோயம்பேடு பிரதான சாலையை வரிசையாக கடந்துசெல்வதால் வாகனங்கள் விபத்தில் சிக்கிவிடுகின்றன.

திடீரென துள்ளி குதித்து மாடுகள் ஓடும்போது, வாகனத்தின் மீது மோதிவிடுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். சில நேரம் உயிரிழப்புகளும் நடந்துள்ளது. எனவே, கோயம்பேடு பகுதியில் சாலையை கடக்கக் கூடிய எருமை மாடுகளை பிடிக்க வேண்டும். மாடுகளை கண்டுகொள்ளாமல் சாலையில் சுற்றித்திரிய விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: