பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு பீர்பாட்டில் அடி; 2 வாலிபர்களுக்கு சரமாரி அடிஉதை

பெரம்பூர்: ‘பைக்கை ஏன் வேகமாக ஓட்டிச்செல்கிறீர்கள்’ என்று கேட்ட இளம்பெண்ணை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபர்கள் 2 பேரை பொதுமக்கள் பிடித்து சரமாரி தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் தீபா (22). இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது 2 பேர் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளனர்.

இதை தீபா தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், பைக்கை திருப்பிக்கொண்டு வந்து தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலால் தீபாவை சரமாரியாக அடித்துள்ளனர். இதன்பின்னர் தீபாவிடம் தகாதமுறையில் நடக்க முயன்றுள்ளனர்.  இதனால் தீபா கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து அந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.இதுபற்றி அறிந்ததும் கொடுங்கையூர் போலீசார் சென்று, பொதுமக்கள் பிடியில் இருந்து இரண்டு வாலிபர்களை மீட்டு  காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

இதன்பிறகு 2 பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி நடத்திய விசாரணையில், ‘’தாக்கப்பட்டவர்கள் கொடுங்கையூர் ஆர்ஆர். நகர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (21), பிரகாஷ் (25) என்று தெரியவந்தது. இருவரும் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரித்துவிட்டு இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories: