தாமரைப்பாக்கம் அருகே திரவுபதி, பொன்னியம்மன் ஆலய தீமிதி விழா

பெரியபாளையம்: தாமரைப்பாக்கம் அருகே பொன்னியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் அருகே மாகரல் கண்டிகை கிராமத்தில் பொன்னியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் தீ மிதி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

இந்தாண்டு கோயிலில் தீமிதி விழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கின. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பெண்கள் கூழ்வார்த்தல் மற்றும் பொங்கல் வைத்தல், கும்பம் படைத்தல், அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த 24ம் தேதி முதல் 105 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். அவர்கள், நேற்று மாலை, பொன்னியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் ஆலயத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பின்னர் இரவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னியம்மன், திரவுபதி அம்மன்களின் உற்சவர் வீதியுலா நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: