மண்ணடியில் பரபரப்பு ரூ. 40 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வாலிபர் மீட்பு; 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: மண்ணடியில் ரூ. 40 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வாலிபர் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பாசிப்பட்டினம், தர்கா தெருவை சேர்ந்தவர் கலீல் ரஹ்மான். இவரது மகன் ஷேக்மீரான் (22), நேற்று மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவில் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த ஒரு மர்ம கும்பல், திடீரென ஷேக் மீரானை கடத்தி சென்றது. இதனால் சக நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில், கலீல் ரஹ்மானின் செல்போனை தொடர்பு கொண்ட மர்ம கும்பல், ‘ஷேக்மீரானை விடுவிக்க ரூ. 40 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் அவரை கொன்று விடுவோம்’ என்று மிரட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த கலீல் ரஹ்மான், சென்னை பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் எஸ்பிளனேடு இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில், ஷேக் மீரானின் செல்போன் சிக்னலை வைத்து, அக்கும்பல் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து மண்ணடி, முத்துமாரி தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத்திருந்த ஷேக் மீரானை மீட்டனர். பின்னர் அங்கிருந்த 4 பேர் கும்பலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில், பிடிபட்டவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த முகமது ராவுத்தர் (45), முகமது ரிபாயிதீன் (25), விஜயன் (29), லட்சுமணன் (27) என்பதும், தப்பி ஓடியவர்கள் அப்பாஸ், மதன்குமார் என தெரியவந்தது.

மேலும் இதுபோன்று யாரையாவது கடத்தினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: