இமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 10 பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் பலி; பலர் படுகாயம்!!

ஷிம்லா : இமாச்சல பிரதேச மாநிலம் குலு பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை 40 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று குலு பகுதியில் இருந்து சைன்ஜ் நகரை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நியூலி-ஷன்ஷார் சாலையில் சைஞ்ச் பள்ளத்தாக்கின் ஜங்லா பகுதியில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 10 பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குலு மாவட்ட டி.சி.அசுதோஷ் கர்க் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து பேசிய அசுதோஷ் கர்க், ஜங்லா பகுதியில் ஏற்பட்ட விபத்து சுமார் காலை 8 மணிக்கு நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்,என்று தெரிவித்தார். இதனிடையே பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து காரணமாக நியூலி-ஷன்ஷார் சாலையில் பல மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: