செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் கழிப்பறை: பராமரிக்க பயணிகள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சரியான பராமரிப்பு இல்லாததால் கழிப்பறை துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டின் மைய பகுதியில் அறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திண்டிவனம், திருப்பதி ஆகிய வெளியூர் பகுதிகளுக்கும், மாமல்லபுரம், கல்பாக்கம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எப்போதும் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்படும். இங்கு பயணிகளின் அத்தியாவசிய தேவையான குடிநீர், பயணிகள் அமர்வதற்கான போதுமான இருக்கைகள் இல்லை. ஒருசில கிராமங்களுக்கு செல்ல பேருந்துக்காக பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். இயற்கை உபாதை கழிக்க நகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடம் மட்டும் செயல்படுகிறது. பயணிகள் பயன்பாட்டிற்கு இலவச கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையை சரிவர பராமரிக்காததால் பயங்கர துர்நாற்றம் வீசுவதோடு கால் வைக்க முடியாத அளவுக்கு அசுத்தமாக உள்ளது.

கழிப்பறையை சுற்றிலும் குவிந்து கிடக்கும் குப்பையை பன்றிகள், நாய்கள், மாடுகள் கிளறுவதால் சுகாதாரமற்ற நிலையுள்ளது. இதன்காரணமாக பயணிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கழிப்பறையை சுத்தம் செய்து தொடர்ந்து முறையாக பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: