சென்னை 2.0 திட்டத்தில் ரூ.4.5 கோடியில் தங்கசாலை பூங்கா: 1 கி.மீ. நீளத்தில் அமைகிறது

சென்னை: ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட தங்கசாலையில், சென்னை 2.0 திட்டத்தில் ரூ.4.5 கோடியில் 1 கி.மீ. நீளத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ராயபுரம், பேசின் பாலம் சாலை, தங்கசாலை மேம்பாலம் அருகில் ரூ.4.5 கோடி செலவில் மியோவாக்கி  காடுகளுடன் பூங்கா அமைக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 3ம் தேதி தொடங்கி வைத்தார்.

இங்கு மாநகராட்சி சார்பில் வேம்பு, புங்கை, நீர் மருது, மூங்கில், பாதாம், இலுப்பை, மாமரம், அரச மரம் உள்ளிட்ட நாட்டு மரங்களும், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகைககள் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. ஒரு கி.மீ. நீளத்தில், 13 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், தியான மண்டபம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராயபுரம் பகுதி மாநகராட்சி செயற்பொறியாளர் லாரன்ஸ் கூறுகையில், ‘‘தங்கசாலை பூங்கா 1 கி.மீ., தூரத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவில், பேவர் பிளாக் நடைபாதை, பூங்கா முழுவதும் எல்இடி‌ விளக்குகள், இருக்கைகள் அமைய உள்ளது‌. மேலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான கழிப்பறை வசதிகளும், குடிநீர் வசதிகளும் செய்யப்பட உள்ளது.குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய சிறுவர் விளையாட்டு திடல் ஏற்படுத்தப்படுகிறது.

கூழாங்கற்களை கொண்டு 8 வடிவில் நடைபாதை மற்றும் தடுப்பு கம்பிகளுடன் கூடிய சுற்றுசுவர் செய்யப்பட உள்ளது. தற்போது பூங்கா பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கும் திறக்கப்பட உள்ளது. இந்த மியாவாக்கி காடுகள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் அமைப்பதால் அதிக அளவு ஆக்சிஜன் உற்பத்தியாகும். இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது குறையும்,’’ என்றார்.

Related Stories: