சென்னையை அடுத்த வானகரத்தில் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி தரப்பு தீவிரம்: சட்டப்படி செல்லுபடியாகாது என ஓபிஎஸ் தரப்பு பதிலடி

சென்னை: சென்னையை அடுத்த வானகரத்தில் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி நடத்தும் கூட்டம் சட்டப்படி செல்லுபடியாகாது என்று ஓபிஎஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், பென்ஜமின் உள்ளிட்ட எடப்பாடி தரப்பினர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பேட்டி: பொதுக்குழு வரும் 11ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். இந்த பொதுக்குழுவிலே, சென்ற முறை பொதுக்குழுவில் நிராகரித்த தீர்மானங்களில் ஒரு சில தீர்மானங்களை தவிர்த்து, மற்ற தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும். அதில் ஒற்றை தலைமை குறிப்பாக பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் இருந்ததே அந்த அதிகாரங்கள் அத்தனையும் உருவாக்கப்படும். அந்த பொதுச்செயலாளர் பதவியில் முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த  பொதுக்குழு செல்லாது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். ஆகவே ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்பதை வைத்திலிங்கமும் ஒத்துக் கொள்கிறார்.

இந்த சூழ்நிலையில் இப்போது ஒருங்கிணைப்பாளர் பதவியும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் இல்லை. இப்போது தலைமை கழக நிர்வாகிகள் தான் இருக்கிறார்கள். ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்கள், நியமனம் செய்த தலைமை அதிமுக நிர்வாகிகள் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளர் மறைந்து விட்டாலோ, பொதுச்செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, அந்த இடம் வெற்றிடமாகிவிட்டால், அந்த பதவி இல்லாமல் போய்விட்டால், ஏற்கனவே நியமிக்கப்பட்ட தலைமைக்காக நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று விதி தெளிவாக உள்ளது.  

ஏற்கனவே நியமிக்கப்பட்ட  தலைமை கழக நிர்வாகிகள் இப்போது தொடர்ந்து செயல்படுகிறார்கள். அந்த கட்சி விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் தான் இந்த பொதுக்குழுவை நடத்துகிறார்கள். எனவே இதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை, எந்த பிரச்னையும் இல்லை. 99 சதவீத அதிமுக நிர்வாகிகள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்களுக்கும் ஒற்றை தலைமை வேண்டும் என்பது தான் விருப்பம். அது எடப்பாடி தலைமையில் தான் இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்கள். அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கின்ற வகையிலே இந்த பொதுக்குழு நடைபெறும்.

ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை, இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை. தலைமை பதவி இல்லாதபோது அவர்களால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் எத்தனை பெயரைப் போடுவது. அதனால் தலைமை கழகம் என்று போட்டு பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தலைமை கழகம் என்ற பெயரை அதிமுக பயன்படுத்தக்கூடாது என்று வைத்திலிங்கம் குறிப்பிட்டிருக்கிறார். அவர் யார் இதனைக் குறிப்பிடுவதற்கு. அவருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது. 99 சதவீத நிர்வாகிகள் இங்கு ஒன்றாக இருக்கின்றோம். 1 சதவீத ஆதரவை வைத்துக் கொண்டு பேசி வருகிறார். இதனைக் குறிப்பிடுவதற்கு அவருக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. சட்டப்படியும் உரிமையும் கிடையாது. இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் கூறினார். நத்தம் விஸ்வநாதனின் இந்த பேட்டிக்கு ஓபிஎஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழை தலைமை கழகம் என்ற பெயரில் அனுப்புவது ஏற்புடையதல்ல. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சர்வாதிகார போக்குடன் செயல்படுகின்றனர். ஜெயலலிதா இறந்த பின்னர் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. கட்சி ஒன்றுப்பட்ட போது பொருளாளர் பொறுப்பில் தான் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. எனவே தற்போது கட்சியின் பொருளாளரான ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் சின்னமும், கட்சியை வழிநடத்தும் அதிகாரமும் உள்ளது. எனவே பொருளாளர் ஒப்புதல் இன்றி தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டினாலும், அது செல்லாது. ஒற்றை தலைமையை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.

தலைமை கழக பதவியில் இருப்பவர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தான் விரும்புகிறார்கள். இவர்கள் பணம், அதிகாரத்தை வைத்து பொதுக்குழு உறுப்பினர்களை இழுக்க பார்க்கிறார்கள். அதிமுக தொண்டர்களின் ஆதரவு, செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் இருக்கிறது. ஒன்றாக, நன்றாக இருந்த இந்த இயக்கத்தை பதவி மோகத்தால் இந்த நிலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பாதையை விட்டு அதிமுக விலகி சென்றுவிடுமோ என்று தொண்டர்கள் அஞ்சுகிற நிலைமையை கொண்டு வந்திருக்கிறார்கள். இது கட்சிக்கு செய்கிற துரோகம் ஆகும். எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு என்ற பெயரில் பொதுக்கூட்டத்தை நடத்தினால், அது சட்டப்படி செல்லுபடியாகாது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஆன்லைனில் பொதுக்குழு

ஒரு வேளை கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரித்தால் அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்தவும் எடப்பாடி தரப்பு திட்டமிட்டு வருதாகவும் மற்றொரு  தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்துவது குறித்தும் அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். கொரோனா தொற்று அதிகரிப்பால் பொதுக்குழு நடத்த அரசு அனுமதி அளிக்காத பட்சத்தில் இத்தகைய மாற்று ஏற்பாட்டில் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: