காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்: விரும்பிய ரகம் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை: காசிமேடு மீன் மார்க்கெட்டில் வழக்கம்போல தாங்கள் விரும்பிய மீன் ரகங்களை வாங்க பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர். சென்னை நகர மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவு சாப்பிடுவதில் அலாதியான பிரியம். குறிப்பாக காசிமேடு மீன்கள் ருசியாக இருக்கும் என்பதால் நேரடியாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சென்னை நகர மக்கள் வாங்குவது வழக்கம். சென்னையில், பல இடங்களில் வெளிமாநில மீன்கள் கிடைத்தாலும், காசிமேடு மீன் சந்தையில் கிடைக்கும் மீன்கள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவது வழக்கம். இதனால், நள்ளிரவு மொத்த வியாபாரிகள் மீன்களை ஏலம் எடுத்து அதிகாலை நேரத்தில் சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக மீன் வரத்து மிக குறைவாகவே இருந்தது. இதனால், ேநற்றும் மீன் வரத்து குறைவாக தான் இருந்தது. பெரிய வகை மீன்கள் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களும் குறைந்த அளவே கிடைத்ததாக கூறப்படுகிறது. தும்பி, நவ்வளை போன்ற மீன்கள், சிறிய ரக வஞ்சரம், சங்கரா மீன்கள் கிடைத்ததாக மீனவர்கள் கூறினர். மீன் பிரியர்கள் ஏராளமானோர் நள்ளிரவு முதல் கூட்டம் கூட்டமாக வந்து மீன்களை வாங்கிச் சென்றனர். இதனால் காசிமேடு பகுதியில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது.

இதுகுறித்து காசிமேடு மீனவர்கள் கூறுகையில், `கடந்த 2 வாரத்துடன் ஒப்பிடுகையில் மீன் விலை அதிகமாக தான் இருந்தது. ஆனால், எங்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் செலவு செய்தோம். மீன்களை விற்பனை செய்ததில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கிடைத்தது. டீசல் விலை உயர்வு காரணமாக மீன்கள் விலை இனி குறைய வாய்ப்பு இல்லை. அதிக அளவு மீன்கள் கிடைத்தால் மட்டுமே மீன் விலை குறையும். அரசு டீசல் மானியத்தை உயர்த்தி தந்தால் நாங்கள் மீன் விலையை குறைத்தாலும் எங்களுக்கு நஷ்டம் வராது’ என கூறினார்.

மீன் விலை (கிலோவுக்கு)

வகை    விலை

வஞ்சிரம்    ரூ.1300

பர்லா    ரூ.380

சங்கரா    ரூ.350

தோல் பாறை    ரூ.350

தேங்காய் பாறை    ரூ.800

கடம்மா    ரூ.380

நெத்திலி    ரூ.200 முதல்

வெள்ளை ஊடான்    ரூ.150

இறால், நண்டு போன்றவை ரூ.400 முதல் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: