மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 7ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 7ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல காற்று சுழற்சி உருவாகி சில இடங்களில் மழை பெய்து  வருகிறது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி, தமிழகத்தில் இயல்பாக 50.7 மிமீ மழைக்கு பதிலாக 79.1 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 56 சதவீதம் கூடுதல் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றின் காரணமாகவும் கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நீலகிரி, கோவை,  திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தான் மழை பெய்து வருகிறது.  அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் நேற்று 70மிமீ மழை பெய்தது. நடுவட்டம் 60மிமீ, வால்பாறை 50மிமீ, மயிலாடுதுறை, தேவாலா, தேக்கடி, அவலாஞ்சி, கூடலூர், பெரியாறு 30மிமீ, பந்தலூர், மேல்பவானி, தாத்தையங்கார்பேட்டை, கொள்ளிடம், திருப்புவனம், திண்டிவனம் 20மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இன்று முதல் 7ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும்,   குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக ஆந்திர கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று  மணிக்கு 50கிமீ வேகத்தில் வீசும். இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: