எத்தியோப்பியாவுக்கு சேவை துவக்கம் விமானத்துக்கு ‘வாட்டர் சல்யூட்’ கொடுத்து அசத்தல் வரவேற்பு

மீனம்பாக்கம்: சென்னை-எத்தியோப்பியா இடையே நேரடி விமான போக்குவரத்து சேவை  நேற்று முதல் தொடங்கியது. இதனால், விமானத்துக்கு ‘வாட்டா் சல்யூட்’ கொடுத்து சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா குறைந்து வருவதால், இந்திய விமான போக்குவரத்து துறை மார்ச் 27 முதல் வழக்கமான சர்வதேச விமான சேவைகளை இயக்குவதற்கு விமான நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. இதையடுத்து பல்வேறு விமான நிறுவனங்கள் ஏப்ரல், மே, ஜூன் என்று படிப்படியாக தங்களது புதிய விமான சேவைகளை இந்தியாவில் தொடங்கி வருகின்றன.

இந்நிலையில், எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் இதுவரை எத்தியோயா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபா நகரிலிருந்து, இந்தியாவிற்கு டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவுக்கு ஏற்கெனவே ஏர்லைன்ஸ் விமானங்களை  இயக்கிவருகின்றன. இப்போது முதல் முறையாக சென்னைக்கு இயக்க தொடங்கியுள்ளது. அதன்படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் முதல் விமானம், எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து புறப்பட்டு நேற்று காலை 8.30 மணிக்கு சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது.

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையின் இரு பக்கங்களிலும், 2 தீயணைப்பு வண்டிகள் நின்று தண்ணீரை பீச்சியடித்து, ‘வாட்டா் சல்யூட்’ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு அதில் வந்த பயணிகளுக்கு, சென்னை சா்வதேச விமான நிலைய வருகை பகுதியில் மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானம் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்கு செல்லும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: