சென்னை விமானநிலையத்தில் பயணியிடம் ரூ.98.55 லட்சம் தங்கம் பறிமுதல்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று மாலை மும்பையில் இருந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ₹98.55 லட்சம் மதிப்பிலான தங்கப்பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இலங்கை பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

சென்னை உள்நாட்டு விமானநிலையத்துக்கு நேற்று மாலை மும்பையில் இருந்து ஒரு பயணிகள் விமானம் வந்து சேர்ந்தது. இதில் ஒரு இலங்கை பயணி துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு பெருமளவு தங்கத்தை கடத்தி வருகிறார் என ஏற்கெனவே சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது. இதைத் தொடர்ந்து, விமானத்தில் வந்த அனைத்து பயணிகளின் உடைமைகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது இலங்கையை சேர்ந்த முகமது இம்ரான் (30) என்ற பயணி, கன்வேயர் பெல்ட்டில் இருந்த தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேற முயன்றிருக்கிறார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர், நான் உள்நாட்டு பயணி என வாய்த்தகராறில் ஈடுபட்டார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை தனியறைக்கு அழைத்து சென்று, அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அவர் வைத்திருந்த பெரிய டிராவலர் பேக்கில் 11 பார்சல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது, அதற்குள் மொத்தம் ₹98.55 லட்சம் மதிப்புள்ள 2.137 கிலோ தங்கப்பசை கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து இலங்கை பயணி முகமது இம்ரானை கைது செய்து, சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: