ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்

சென்னை: சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் (உறவு முறை) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இதுவரை 85 க்கும் மேற்பட்டோருக்கு வெற்றிகரமாக நடந்தது. அதில் 99% பேர் நலமாக உள்ளனர் என்று அரசு ராயப்பேட்டை மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அரசு ராயப்பேட்டை மருத்துவமனையின் இயக்குனர், கண்காணிப்பாளர் மணி மற்றும் சிறுநீரக துறை மருத்துவர் வெங்கட்ராமன் கூறியதாவது: தமிழகத்திலேயே சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் தான் சிறுநீரக இயல் துறை, கடந்த 1980ம் ஆண்டு முதன்முதலில் துவங்கப்பட்டது. இங்கு வாரம் திங்கள், வியாழன் புற நோயளிகள் பிரிவு, பிரதி புதன்கிழமை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான புற நோயாளி பிரிவும் உள்ளது.

மேலும் இது தொடர்பாக சிறுநீரக பையாப்சி, ரத்த சுத்திகரிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்றவை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யும் வசதி உள்ளது. மக்களை தேடி மருத்துவம் மூலம் தொடர் வயிறு ரத்த சுத்திகரிப்பு பயனாளிகளின் வீட்டிற்கே சென்று வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசின் உதவியுடன் 28 ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு மாதம் 115 சிறுநீரக நோயாளிகள் தொடர் ரத்த சுத்திகரிப்பு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 2 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன.

இந்த துறையில் இதுவரை 85 க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (உறவு முறை மட்டும்) வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது, மேலும் மாற்று ரத்த வகை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 2 பேருக்கு வெற்றிகரமாக செய்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் இறப்புக்கு முன் சிறுநீரக தானம் பதிவு செய்யப்படுகிறது. சிறுநீரக வியாதிகளுக்கு நோயளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, சிறுநீரக நோய் பரிசோதனை, சிகிச்சை ஆகியவற்றை செய்து கொள்ள அரசு ராயப்பேட்டை மருத்துவமனையை பொது மக்கள் அணுகலாம். சமீபத்தில் 11 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு தற்போது அச்சிறுவன் பள்ளிக்கு செல்கிறான்.இவ்வாறு அவர் கூறினார்.

சிறுநீரக நோயாளிகள்

எண்ணிக்கை

புறநோயளிகள்    70

உள் நோயாளிகள்    14

டயாலிசிஸ்

நேயாளிகள்    35

வயிறு டயாலிசிஸ் நோயாளிகள்    3

Related Stories: