மின் இணைப்பு துண்டிப்பு என வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களின் செல்ேபான் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாத பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுஞ்செய்தி ஆக அனுப்புவர். இதனை நம்பி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம் வங்கி கணக்கு விவரங்களை பெற்று அவர்களது அக்கவுண்டிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பர்.

எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த மொபைல் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். இவ்வாறு தெரிவித்துள்ளார். மற்றொரு அறிக்கை: அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்பிலுள்ள நபர்கள் ஆகியோரின் படங்களை வாட்ஸ்அப் டிஸ்பிளே படங்களாக பயன்படுத்தி சக அதிகாரிகள் மற்றும் பணிபுரியும் அலுவலர்களை தொடர்பு கொண்டு அமேசான் கிப்ட் கார்டுகளை வாங்கி அனுப்புமாறு கூறுதல் மற்றும் பணம் அனுப்ப கூறுதல் போன்ற குற்றங்கள் தற்போது நிகழ்ந்து வருகிறது.

எனவே, பொதுமக்கள் எவரும் தங்களுக்கு தெரிந்த அதிகாரியின் புகைப்படத்துடன் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து வரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளையோ, இ-மெயில்களையோ அல்லது பேஸ்புக் மெசெஞ்சர் குறுஞ்செய்தியையோ நம்பி பணமோ அல்லது கிப்ட் கார்டுகளோ அனுப்ப வேண்டாம். அத்தகைய குறுஞ்செய்திகளை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Related Stories: