சென்னை விமான நிலையத்தில் குண்டும் குழியுமான கார் பார்க்கிங்: பயணிகள் அவதி

சென்னை: சென்னை விமான நிலைய கார் பார்க்கிங் பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பீதி குறைந்து, ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்ட பின்பு நாளுக்கு நாள் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், மதுரை, திருச்சி, கொல்கத்தா உள்ளிட்ட உள்நாட்டு விமானங்கள், துபாய், கத்தார், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உட்பட சர்வதேச விமானங்கள், நாள் ஒன்றுக்கு இரவு மட்டும் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தினசரி இந்த விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள், அடுக்குமாடி கார் பார்க்கிங் பணிகள் நடந்து வருவதால், ஆங்காங்கே குழிகள்  தோண்டப்பட்டு, விமான நிலைய வளாகம் மற்றும் கார் பார்க்கிங் பகுதி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இது விமான பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக வாகனங்களில் வரும் விமான பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுபற்றி விமான பயணிகள் கூறுவதாவது: சர்வதேச விமான முனையத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்தத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

ஆனால், நிறுத்தத்திற்கான நுழைவாயில் எங்குள்ளது. காரை எங்கு நிறுத்துவது போன்ற எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை.  இதுதவிர பள்ளங்களுக்கு முன் எச்சரிக்கை பலகை, தடுப்புகள் ஏதும் வைக்கவில்லை. இதனால்  விமான நிலையத்திற்கு வரும் கார்கள், கிடைக்கும் இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. இரவு நேரங்களில், அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்தவும், வாகன நெரிசல்களை குறைக்கவும் விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: