தமிழகத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். மகளிர் சிறப்பு சிறுநீரயியல் மாநாடு மற்றும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் சிறப்பாக பணியாற்றிய  மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் பேசியதாவது: கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.  தடுப்பூசி போடப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி இருக்கும். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும், 3வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய நபர்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். வரும் 10ம் தேதி  31வது மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 95சதவீதம் பேர் வீட்டில் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: