ஓஎம்ஆர் மற்றும் ஓஆர்ஆர் சாலைகளில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு; தினசரி பயணிப்போருக்கு கூடுதல் செலவு

சென்னை: பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) மற்றும் வெளிவட்ட சாலையில் (ஓஆர்ஆர்) உள்ள 5 சுங்கச்சாவடிகளில் குடியிருப்பு வாசிகளின் எதிர்ப்பையும் மீறி டோல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக தினசரி பயணம் செய்வோர் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது ​​ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் ரூ.18 முதல் ரூ.323 வரை மாறுபடும். கார்களுக்கான மாதாந்திர பாஸ்க்கு கட்டணமாக ரூ.2,923 வசூலிக்கப்படுகிறது. ஐந்து சுங்கச்சாவடிகளில், நான்கு வெளிவட்ட சாலையிலும் (ஓஆர்ஆர்) மற்றும் ஒன்று ஓஎம்ஆர் சாலையிலும் உள்ளது.

வழக்கமாக, சுங்கக் கட்டணம் ஆண்டுதோறும் திருத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு கட்டணம் திருத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். வண்டலூரை, வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி, நெம்மேலிச்சேரி மற்றும் சின்னமுல்லைவாயல் வழியாக மீஞ்சூருடன் இணைக்கும் வெளிவட்ட சாலையின் 60 கிமீ நீளத்தில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. இரண்டாவது உயர்வின் காரணத்தை விளக்கி, தமிழ்நாடு சாலை மேம்பாடு நிறுவனத்தின் பொது மேலாளர் கூறுகையில், ‘‘நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 1ம் தேதி விகிதங்கள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த நான்கு சுங்கச்சாவடிகளிலும் கட்டண வசூல் தொடங்கியது ஜனவரி 5 அன்று மட்டுமே. விதிகளின்படி சுங்கச்சாவடி நிறுவப்பட்டதில் இருந்து ஆறு மாதங்களுக்குள் கட்டணங்களை மாற்ற முடியாது. எனவே, திருத்தப்பட்ட கட்டண விகிதங்களை இப்போது அறிவித்துள்ளோம். இது ஜூலை 5 முதல் பின்பற்றப்படும். அடுத்த ஆண்டு முதல், வருடாந்திர திருத்தம் ஏப்ரல் 1ம் தேதி நடைபெறும்’’ என்றார். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘இந்த கட்டண உயர்வால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பட்டாபிராமில் பாலம் கட்டும் பணி காரணமாக தண்டரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாற்றுப்பாதைக்கு எரிபொருளுக்கு அதிக செலவு செய்து வருகிறோம். அடிக்கடி இப்பாதையில் செல்வதால் இப்போது, ​​நாங்கள் சுங்கச்சாவடியில் அதிக செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வசூலிக்கப்படும் டோல் கட்டணங்களை நிறுத்துமாறு மாநில அரசு ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கட்டணங்களை ரத்து செய்வதில் முன்னுதாரணமாக இருந்தால் மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றும்.

மேலும், அறிவிப்பில் ஆட்டோக்களுக்கான திருத்தப்பட்ட கட்டணங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. வசூலை தொடர நினைத்தால், அதை முறையாக செயல்படுத்த வேண்டும். மேலும் வழித்தடத்தில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் தேவையான வசதிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: