தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி: செங்கல்பட்டு கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி வரும் 6ம்தேதி காலை 9.30 மணியளவில்  செங்கல்பட்டு  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வரவேண்டும்.  ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மாபொசி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போர்த் தியாகிகள்,  முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய தலைப்புகளில் போட்டி நடத்தப்படுகிறது.  

கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.  செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளில் படிக்கும்  மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: