கழிவுநீர் கால்வாய் அமைக்கும்போது சுற்றுச்சுவர் இடிந்து; 4 பேர் படுகாயம்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், நேற்று மாலை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பீகார் வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 40வது வார்டுக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை பகுதியில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை இங்கு கால்வாய் கட்டும் பணியில், அருகே ஒரு தனியார் இடத்தின் 50 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

 

இதில் கால்வாய்க்குள் கட்டிட இடிபாடுகள் விழுந்ததில், அங்கு வேலை பார்த்த பீகாரை சேர்ந்த மசூப் (34), நதீன் (28), சானபாக் (18) ஆகிய 4 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இப்புகாரின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்த நிறுவன மேலாளர், ஊழியர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: