ஆவடி-வாணியன்சத்திரம் சாலையில் மழைநீர் கால்வாயில் கட்டிட கழிவுகள் குவிப்பு; அதிகாரிகள் அலட்சியம்

ஆவடி: ஆவடி-வாணியன்சத்திரம் சாலையில் பலகோடி மதிப்பில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாயில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டு தூர்ந்து போயிருக்கின்றன. இதனால் அங்கு மழைநீர் தேங்கும் அபாயநிலை உள்ளது. இவற்றை அகற்றவோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு மழைக் காலத்தின்போது ஆவடி-வாணியன்சத்திரம் சாலையில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்.

இதனால் இங்குள்ள கோயில்பதாகை, பூம்பொழில் நகர், கலைஞர் நகர், கன்னடப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள், கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், இப்பகுதி சாலைகளும் கடுமையாக சேதமடைந்தன. இதற்கு தீர்வு காணும் வகையில், தற்போதைய திமுக ஆட்சியில் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் ஆவடி-வாணியன்சத்திரம் சாலையில் எச்விஎப், எஸ்டேட் நுழைவுவாயல் முதல் கன்னடபாளையம் வரையுள்ள 1.2 கிமீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் 5.5 அடி ஆழம், 5 அடி அகலத்தில் ₹11 கோடி மதிப்பில், கடந்த மார்ச் புதிதாக கான்கிரீட் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கின.

கடந்த மாதம் முடிக்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கால்வாய் அமைக்கும் பணிகள் அபாய நிலையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் அவ்வழியே இரவு நேரங்களில் வரும் பாதசாரிகள், அரைகுறை நிலையில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து அடிபடுகின்றனர். மேலும், இக்கால்வாய்களில் தற்போது கட்டிடக் கழிவுகள் உள்பட பல்வேறு குப்பைக் கழிவுகளால் நிரம்பி துர்நாற்றம் வீசி வருகின்றன. இதற்கு கால்வாய்க்கு இடையே மின்கம்பம் அகற்றப்படாததால் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்படுகிறது என மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆவடியின் பல்வேறு இடங்களில் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றுவதில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்களில் கட்டிட மற்றும் குப்பைக் கழிவுகள் நிரம்பி வழிகின்றன. இவற்றை அகற்றுவதிலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே, இப்பணிகளை துரிதப்படுத்தி, அங்குள்ள கட்டிட கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: