11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை

சென்னை:தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதை அடுத்து. தமிழக எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வெப்ப சலனத்தாலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டால் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது.

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களின் கனமழை பெய்தது. அதிக பட்சமாக காவேரிப்பாக்கத்தில் 60மிமீ, திருத்தணி 50மிமீ, மழை பெய்தது. இதையடுத்து, இன்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதே நிலை 4ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை லட்சத்தீவு பகுதி, கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு , மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். இந்த இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: