பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் மேலும் ஒருவர் பலி

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 28வது வார்டுக்குட்பட்ட முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கடந்த 2 நாட்களுக்கு முன், பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தபோது, நெல்சன் என்ற கூலி தொழிலாளி விஷ வாயு தாக்கி உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளியான ரவிக்குமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக, மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதாள சாக்கடை பராமரிப்பு பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் பிரகாஷ், வினிஷ் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவிக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை புனல்குளம் பகுதியை சேர்ந்த ரவிக்குமாருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், சிவராமன் (9) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவர் கைது: பெருங்குடி, காமராஜர் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிந்ததால், நேற்று முன்தினம் இதை சுத்தம் செய்யும் பணியில் பள்ளிக்கரணையை சேர்ந்த பெரியசாமி (38), தட்சிணாமூர்த்தி (38) ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கியதில், இருவரும் மயங்கினர். இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே, இறந்தார். தட்சிணாமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து, அடுக்குமாடி குடியிருப்பு மேலாளர் கிருஷ்ணன் (58), ஒப்பந்ததாரர் சரவணன் (31) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Related Stories: