கால்வாய் தூர்வாரும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் புகாருக்கு கவுன்சிலர்கள் ஆளாகக்கூடாது: அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை

சென்னை: சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இதில், திமுக கவுன்சிலர்கள் 153 பேர் உள்ளனர். இந்தநிலையில், சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, கட்சியின் துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் மத்தியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க பாடுபட்டு வருகிறார். அவர் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும். ஆனால் ஒரு சில கவுன்சிலர்கள் மீது புகார்கள் வருகிறது. கவுன்சிலர்களும் சிலர் வார்டு பக்கம் முழுமையாக சென்று பணிகளை கவனிப்பதில்லை. மழைக் காலம் வருவதால் கால்வாய் தூர்வாரும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். சில வார்டுகளில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு உள்ளது. மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள். புகார்களுக்கு ஆளாக கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு அமைச்சர் கே.என்.நேரு, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களை வைத்துக்கொண்டு அந்த பகுதி கவுன்சிலர்களின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். சில வார்டுகளில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு இருக்கிறதா என்பது பற்றியும் விசாரித்தார். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள். புகார்களுக்கு ஆளாக கூடாது என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். பெண் கவுன்சிலர்களின் கணவர்களையும் அழைத்து உங்கள் தலையீடு இருக்க கூடாது என்றார். மேலும் சில கவுன்சிலர்கள் மீது புகார்கள் வந்திருந்ததால் அந்த கவுன்சிலர்களிடமும் தனியாக விசாரணை நடத்தினார். தொடர்ந்து அமைச்சர் கேஎன்.நேரு கவுன்சிலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Stories: