நடிகர் டி.எஸ்.ராஜா காலமானார்

சென்னை: நடிகரும், சண்டைக்கலைஞரும், எம்.ஜி.ஆர் நகர் திமுக முன்னாள் வட்ட செயலாளருமான டி.எஸ்.ராஜா (88), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். இவர், எம்.ஜி.ஆரிடம் நீண்ட காலம் பணியாற்றியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் நடித்த படங்களில் ஸ்டண்ட் கலைஞராக நடித்தவர். என்டிஆர், அமிதாப் பச்சன், ஜிதேந்திரா, தர்மேந்திரா, பிரான், ரஞ்சித் ஆகியோருக்கு ‘டூப்’ கலைஞராக நடித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் 113வது வட்ட திமுக செயலாளராக இருந்தவர். தமிழ்ப் படவுலகில் ஸ்டண்ட் யூனியன் மற்றும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் யூனியன் தொடங்கிய முன்னோடிகளில் முதன்மையாக செயல்பட்டவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 32 வருடங்கள் செயற்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மேலும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (பெப்சி) செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் நடிகரும், தயாரிப்பாளரும், கில்டு தலைவருமான ஜாகுவார் தங்கத்தின் மாமனார். மறைந்த டி.எஸ்.ராஜாவின் இறுதிச்சடங்கு இன்று மாலை நெசப்பாக்கம் மயானத்தில் நடக்கிறது.

Related Stories: