தற்காலிக முறையில் ஆசிரியர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000, முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

மீண்டும் மீண்டும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும். எனவே, தற்போது தற்காலிக முறையில் ஆசிரியர்கள் நியமிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: