வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம்... உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு!!

சென்னை : வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம் நீடிப்பதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 34 பதவிகளுக்கு மட்டுமே கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை சின்னங்களை ஒதுக்க உள்ளது. வேட்பு மனுவில் உள்ள படிவத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாமல் உள்ளதால், அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு, தஞ்சாவூர் மாநகராட்சியில் 8வது வார்டுகளில் மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் களம் இறங்கவில்லை. தேனி பெரியகுளம் நகராட்சியில் 26வது வார்டு, மயிலாடுதுறை நகராட்சியில் 19வது வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது. இதர ஊராட்சி பதவி இடங்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் அவர்களுக்கு சுயேச்சை சின்னங்களே ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Related Stories: