பத்திரப்பதிவு துறையில் கடந்த ஆண்டை விட ரூ.2,100 கோடி வருவாய் உயர்வு: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை அமைச்சர் தலைமையில் பதிவுத்துறை உயர் அதிகாரிகளுடன்  ஆய்வுக்கூட்டம் நடந்தது. பின்னர், அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரூ.4,213 கோடி வருவாய் வந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட பத்திரப்பதிவு துறையில் ரூ.2,100 கோடியாக உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு விலை மதிப்பீடு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வருபவர்களுக்கு இடைத்தரகர்கள் துணை இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் பத்திரப்பதிவு  நடைபெறுவதால் வருவாய் உயர்ந்துள்ளது. மேலும், ஆவண எழுத்தர்கள் எண்ணிக்கையை உயர்த்த, தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் உரிமை வழங்கப்பட இருக்கிறது.

திருப்பூரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று தமிழகத்தின் பிற சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் குறித்து தகவல் வந்தால் அவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மூன்று மாதங்களில் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலமாக ரூ.170 கோடி வருவாய் வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள எந்த ஒரு இடத்தையும் எங்கும் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யும் போது தவறுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இடம் அமைந்துள்ள, துணை பதிவுத்துறை அலுவலர் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: