வளசரவாக்கம் அகத்தீஸ்வரர், வேள்வீஸ்வரர் கோயிலில் ரூ.84 லட்சத்தில் புதிய திருக்குளம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோயிலில் ரூ.84 லட்சம் செலவில் புதிய திருக்குளம் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார். சென்னை, வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோயில் திருப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: வளசரவாக்கம் வேள்வீஸ்வரர் கோயில் குளத்தை  84 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கோயிலுக்கு உண்டான அடையாளத்தோடு மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. மாநகராட்சியும், அறநிலையத்துறையும் இணைந்து குளத்தை கோயில் குளம் போல வடிவமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். அதற்கான வரைபடங்களை தயாரித்து வரும் 10ம் தேதிக்குள் முதல்வரிடம் ஒப்புதல் பெறப்படும். 2006ல் தொடங்கப்பட்ட இந்த கோயிலின் திருப்பணிகள் முடிவுற்று 2010 ல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

ஆகமவிதிப்படி 12 ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். திருப்பணிகள் மேற்கொள்வதற்கு அடிப்படை பணிகளை மண்டல குழுவின் ஒப்புதலை பெற்று துவங்க இருக்கின்றோம், மாநில குழுவின் ஒப்புதலை பெற்று கோயிலுக்கு வரும் பக்தர்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவுசெய்கின்ற சூழ்நிலை ஏற்படுத்தப்படும். கோயில் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடங்களின் பட்டாக்களை ரத்து செய்ய வருவாய் துறையிடம் முறையாக விண்ணப்பிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளோம். இதுவரை 2600 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த இடைப்பட்ட காலங்களில் சுமார் ரூ.400 கோடி அளவிற்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்டு இருக்கிறோம். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயிலுக்குச் சொந்தமான இடங்களை மீட்கின்ற வேட்டை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: