அதிமுக உட்கட்சி தேர்தல் ரத்து கோரி வழக்கு தொடர அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் மற்றும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமிக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சிவில் வழக்கு தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அதில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் நடந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு  நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கடந்த 2000ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளதாகவும், உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு இன்று வரை உறுப்பினராக உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதை மறுத்து அதிமுக நிர்வாகிகள் தரப்பில், உறுப்பினர் அட்டையை புதுப்பித்ததாக கூறி மனுதாரர் தாக்கல் செய்த ஆவணம் போலியானது. அவர் தற்போது அதிமுக உறுப்பினர் இல்லை என்று வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  வழக்கு தொடர இருவருக்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய காலதாமதம் ஆனது.  இந்நிலையில், இந்த தாமதத்தை ஏற்று வழக்கை பட்டியலிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன், இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு  ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமிக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

Related Stories: