சென்னை அருகே கழுத்தை நெரித்து கள்ளக்காதலி கொலை; தூக்கில் தொங்கவிட்ட முதியவர் கைது

சென்னை: சென்னை  செங்குன்றம் அருகே கிராண்ட்லைன் கரிகால் சோழன் நகரை சேர்ந்தவர் நாகன் (65). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவர் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். ஆந்திர மாநிலம், தடாவை சேர்ந்தவர் அற்புதம்மாள் (50). இவர் செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், அடிக்கடி வெளியூர் செல்வதற்காக, நாகன் பேருந்து நிலையத்துக்கு வந்து சென்றபோது, அற்புதம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், அது கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து, அற்புதம்மாளை வீட்டுவேலை செய்வதற்காகவும்,  உடல்நலம் பாதித்த  மனைவியை கவனித்துக் கொள்வதற்காகவும் வீட்டிற்கு அழைத்துசென்று தங்க வைத்தார்.  கடந்த 25ம் தேதி இரவு, குடிபோதையில் நாகனுடன் வாய்த்தகராறில் ஈடுபட்ட அற்புதம்மாள், அவர் வாங்கி கொடுத்த செல்போனை தூக்கி எறிந்து உடைத்தார். இதனால், ஆத்திரமடைந்த நாகன் அற்புதம்மாளை சரமாரியாக அடித்து, உதைத்து, கழுத்தை நெரித்துள்ளார். அதில், மயங்கிய அவரை மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டார். பின்னர், மறுநாள் காலையில்,  செங்குன்றம் போலீசாரிடம் தனது வீட்டில் வேலை செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என புகார் கொடுத்தார்.

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து, மூதாட்டியின் சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், அற்புதம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நாகனை பிடித்து விசாரித்தபோது, அற்புதம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், நேற்று நாகனை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலியை கொலைசெய்துவிட்டு, தற்கொலை என, நாடகமாடிய முதியவர் கைது செய்யப்பட்ட   சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: