திருத்தணி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு, பணிக்கொடை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 70 கோயில் பணியாளர்கள் மற்றும் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிக்கொடை ரூ.2,70,09,752-க்கான காசோலையை நேற்று வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தர மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமது பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கும் தமிழக கோயில்களின் நலனை மேம்படுத்த வேண்டும் என்ற மகத்தான பணியினை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது. ஆட்சி பொறுப்பேற்ற நாள்முதல், கோயில் வளர்ச்சிக்காவும், பக்தர்களின் நலனுக்காகவும் முனைப்புடன் செயல்பட்டு அறிவிப்புகளை நிறைவேற்றி அவற்றை பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழ் கடவுள் முருகனின் ஐந்தாவது படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற 70 கோயில் பணியாளர்கள் மற்றும் காலஞ்சென்ற பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிக்கொடை ரூ.2,70,09,752-க்கான காசோலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Related Stories: