சென்னை, தியாகராயர் சாலையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்வு: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அறிவிப்பு

சென்னை: தியாகராயர் சாலையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தத்தில் பார்க்கிங் கட்டணம்  உயர்த்த சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மேயர் பிரியா கூட்டத்துக்கு தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் (பொறுப்பு) பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது, கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்னைகளை தெரிவித்தனர்.

அப்போது, 81வது வார்டு கவுன்சிலர் டாக்டர் சாந்தகுமாரி (திமுக) சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு அதில் இருந்து எவ்வளவு உரம் தயாரிக்கப்படுகிறது, அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசும்போது, ‘‘திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது.

ஒரு ஆண்டில் மக்கும் குப்பைகள் 1.54 லட்சம் மெட்ரிக் டன்னும், 75,000 மெட்ரிக் டன் மக்காத குப்பைகளும் தரம் பிரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு நவீன தொழில்நுட்பம் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது. அதன்படி 3 ஆயிரம் டன் உரம் இந்த குப்பை கழிவுகளில் இருந்து  தயாரிக்கப்படுகிறது. இதில் 200 மெட்ரிக் டன் குப்பைகள் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது. மற்றவை சென்னை மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் சென்டர் மீடியனில் உள்ள செடிகளுக்கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.

அடுத்து 135 வார்டு கவுன்சிலர் உமா ஆனந்த் (பாஜக) பேசும்போது, “எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. அதை நான் வரவேற்கிறேன். அதேநேரம் இந்த பணிகள் எல்லாம் முடிவடைந்து, மழைநீர் எல்லாம் மாம்பலம் கால்வாய் வழியாகத்தான் வெளியேற வேண்டும். ஆனால் மாம்பலம் கால்வாய் தூர்வாரப்படாததால் மழைநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். எனவே இந்த பணிகள் முழுமையாக முடிவடைய வேண்டுமானால் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டில் பூங்காக்கள் எதுவும் இல்லை” என்றார். இதற்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசும்போது, “நானே நேரில் அந்த பகுதிகளில் ஆய்வு செய்து மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவேறாமல் இருந்தால் நடவடிக்கை எடுப்பேன். பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையடுத்து மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மொத்தம் 83 வாகன நிறுத்த இடங்கள் உள்ளது. இதில் கார், இரண்டு சக்கர வாகனம் என மொத்தம் 12,000 வாகனங்களை நிறுத்த முடியும். காருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.20, இரண்டு சக்கர வாகனத்துக்கு ரூ.5ம் வசூலிக்கப்படுகிறது. தி.நகர் தியாகராயர் சாலையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த பார்க்கிங் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு இதுவரை காருக்கு ரூ.40ஆக இருந்தது. இது ரூ.60ஆக உயர்த்தப்படுகிறது. இரு சக்கர வாகனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 என இருந்தது ரூ.15ஆக உயர்த்தப்படுகிறது.

* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு சிறு வயதில் இருந்தே ஆண் - பெண் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக பள்ளிகளில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.

* சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இரண்டு செட் சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சீருடைகள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

* மழைநீர் காலங்களில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக 35 மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட நீர்வழி தடங்களை சுத்தப்படுத்தும் பணிக்காக ரூ.2,290 கோடியில் மதிப்பீட்டில் ரோபோட்டிக் மல்டி பர்பஸ் எஸ்கலேட்டர் இயந்திரங்கள் வாங்கப்படும்.

* விமான நிலைய ஓடு பாதை பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை உள்ள அடையாறு ஆற்றங்களை ஓரம் இடது பக்கம் மட்டும் மரங்கள் நட்டு பராமரிக்கும் பணி ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் நடைபெற உள்ளது.

* வார்டு 53க்கு உட்பட்ட போஜராஜன்நகர் பகுதியில் ரயில்வே சந்திப்பை கடக்க மக்கள் அதிகம் சிரமப்படுகின்றனர். இங்கு அதிகளவுபோக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க வாகன சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.13 கோடியில் இந்த பணிகள் நடைபெறும் என்பது உள்பட 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பூஜ்ஜிய நேரத்தை ரத்து செய்யக்கூடாது

இன்று கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிவடைந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் பூஜ்ஜிய நேரம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நிலைக்குழு தலைவர் தனசேகரன் எழுந்து, “பூஜ்ஜிய நேரத்தில் தான் வார்டுகளில் உள்ள பிரச்னைகளை உறுப்பினர்கள் தெரிவிக்க முடியும். அப்போதுதான் அந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். 15 முதல் 20 உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கிடைக்கிறது.

பூஜ்ஜிய நேரத்தை ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உறுப்பினர்களின் பிரச்னைகளை தெரிவிக்கும் வகையில் அடுத்த மாமன்ற கூட்டத்தில் பூஜ்ஜிய நேரத்தை நீட்டிக்க வேண்டும். அதில் 20 முதல் 30 உறுப்பினர்களையாவது பேச வைக்க வேண்டும். இதற்காக  நாள் முழுவதும் கூட்டத்தை நடத்தலாம். பூஜ்ஜிய நேரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றார். இதற்கு மேயர் பிரியா பதில் அளித்தபோது, “கொரோனா பரவல் காரணமாக பூஜ்ஜிய நேரம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த கூட்டத்தில், பூஜ்ஜிய நேரத்தை அதிகரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Related Stories: