புழல் உள்ளிட்ட சிறைகளில் பிளஸ் 1 தேர்வில் 89 கைதிகள் தேர்ச்சி

புழல்: புழல் உள்பட பல்வேறு மாவட்ட சிறைகளில் இருந்த 5 பெண்கள் உள்பட 89 கைதிகள் நேற்று வெளியான பிளஸ் 1 தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சிறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை புழல் மத்திய சிறையில் 2 பெண்கள் உள்பட 26 கைதிகளும், வேலூர் சிறையில் 2 பெண் உள்பட 16 பேர், கோவை சிறையில் 6 பேர், சேலம் சிறையில் 14 பேர், திருச்சியில் 11 பேர், மதுரையில் 16 பேர், பாளை சிறையில் 7 பேர், மதுரை பெண்கள் சிறையில் ஒருவர் என மொத்தம் 5 பெண்கள் உள்பட 97 பேர் கடந்த மே மாதம் பிளஸ் 1 தேர்வு எழுதியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், புழல் உள்பட தமிழகத்தின் பிற மாவட்ட சிறைகளில் தேர்வு எழுதிய 5 பெண்கள் உள்பட 89 பேர் என மொத்தம் 91.75 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் மதுரை பெண்கள் சிறையை சேர்ந்த அமுதசெல்வி 557 மதிப்பெண்ணுடன் முதலாவதாகவும், மதுரை சிறையை சேர்ந்த அருண் 538 மதிப்பெண்ணுடன் 2வதாகவும், புழல் சிறையை சேர்ந்த ராஜேஷ் 516 மதிப்பெண்ணுடன் 3வதாகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து கைதிகளுக்கும் தமிழக காவல்துறை இயக்குநர் சுனில்குமார் சிங், சிறைத்துறை துணை தலைவர் முருகேசன், புழல் சிறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் உள்பட பல்வேறு மாவட்ட சிறை கண்காணிப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: