சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்பு

சென்னை: சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, நடுக்குப்பத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (52). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தம் (58), கமல்நாதன் (50), சக்தி (45) ஆகிய 3 பேரும் மீனவர்கள். தனக்கு சொந்தமான விசைப்படகில் தர்மலிங்கம் தனது 3 நண்பர்களுடன் சென்னைக்கு வந்திருக்கிறார். பின்னர் 4 பேரும் கடந்த ஒரு மாதமாக தண்டையார்பேட்டை, திடீர் நகரில் வசிக்கும் தர்மலிங்கத்தின் உறவினர் கோவிந்தராஜ் வீட்டில் தங்கியுள்ளனர்.

மேலும், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிகாலை விசைப்படகில் தர்மலிங்கம் உள்பட 4 பேரும் கடலுக்கு சென்று மீன்பிடித்து, அன்று மாலைக்குள் கரை திரும்பி மீன்களை விற்றுவிடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம் போல் 4 பேரும் விசைப் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன்பிறகு நேற்றிரவு வரை 4 பேரும் படகுடன் கரைக்கு திரும்பவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் தர்மலிங்கத்தின் மகன் சந்திரசேகர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கடலோர காவல் படையினர் மீட்பு படகு மூலம் நடுக்கடலில் விசைப் படகுடன் மாயமான 4 மீனவர்களையும் தீவிரமாக தேடி வந்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் 4 மீனவர்களையும் உயிரோடு மீட்டனர். இதனால் அவர்களது உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: