சுற்றுலா பயணிகள் குவிந்தும் அடிப்படை வசதி இல்லாத குண்டாறு அணை

செங்கோட்டை :  குண்டாறு அணையில் அடிப்படை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.  செங்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் குண்டாறு அணை அமைந்துள்ளது.  குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இயற்கையான ரம்மியமான சூழ்நிலையை அனுபவிக்க இந்த அணைக்கும் வந்து செல்வது வழக்கம். 36 அடி உயரம் கொண்ட இந்த அணை தற்போது 35அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. அணையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள நெய்யருவி சுற்றுலாப்பயணிகள் பெரிதும் விரும்பும் அருவியாக தற்போது மாறி வருகிறது.

இந்த அருவியில் இப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் எப்போதும் வந்து குளித்து செல்கின்றனர். இங்கு கோடை காலம் தவிர மற்ற நாட்களிலும் தண்ணீர்விழும் என்பது இதன் தனி சிறப்பு, மேலும் தற்போது குற்றால சீசன் துவங்கியுள்ளதால் குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது . எனவே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகை இங்கும் அதிகரித்துள்ளது.

இப்பகுதியில் ரம்மியமான சூழல் நிலவுவதால் குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடனே வந்து செல்வதாக தெரிவிக்கின்றனர். ஏனெனில் இங்கு அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர், மின் விளக்குகள், பார்க்கிங் போன்ற வசதிகள் அமைக்கப்படவில்லை.

 மேலும் பெண்கள் குளிக்க தனியாக வசதி செய்யப்படவில்லை.

ஆண்கள் கூட்டம் கூட்டமாக அருவியில் கும்மாளமிடுவதால் அங்கு பெண்கள் குளிக்க அச்சப்படுகின்றனர். ஆண்கள், பெண்களை முறைப்படுத்திட காவலர்கள் இல்லாததால் தாங்கள் அருவிகளில் குளிக்கமுடியாமல் ஓடைநீரில் குளித்து செல்வதாக பெண்கள் தெரிவிக்கின்றனர் . மேலும் பெண்களுக்கான கழிப்பிட வசதி, உடைமாற்றும் அறை இடிந்து பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இங்கு பராமரிப்பில்லாத பூங்கா ஒன்று உள்ளது.

இந்த பூங்காவில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே உடைத்தும், மது போதையில் பெண்களை கேலி செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே, சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறை பாதுகாப்பளிக்க நடவடிக்கை வேண்டும், மேலும் பூங்கா மற்றும் அருவிக்கு செல்லும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவ்வாறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டால் சிறந்த சுற்றுலாத்தலமாக மாறி புதூர் பேரூராட்சிக்கு வர்த்தகத்தை அள்ளிக்கொடுக்கும் என்பதில் ஜயமில்லை.

Related Stories: