ஆன்லைன் கேம், கேசினோவுக்கு 28% ஜிஎஸ்டி?.. நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு..!

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் கேசினோ உள்ளிட்டவைகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலில் 47-ஆவது கூட்டம், சண்டீகரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறாா்கள். இதில் குதிரை பந்தையம், ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ சூதாட்டங்கள் ஆகியவற்றிற்கு 28% ஜிஎஸ்டி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது கசினோ, குதிரை ரேசிங், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல செயற்கைக் கை, கால் போன்றவற்றுக்கும் சேதமடைந்த கை, கால்களைச் சுற்றித் தாங்கிப் பிடிக்கும் உபகரணங்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. செயற்கை கை, கால், சுத்திகரிக்கப்படும் நீர் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே இவை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் இழப்பீடு வழங்குவதை தொடர வேண்டும் என மாநிலங்கள் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: