சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 77.54 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி..!

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 7754 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 2021-2022ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 11ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 3,168 மாணவர்கள், 3507 மாணவியர்கள் என மொத்தம் 6673 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 2070 மாணவர்கள் 3.104 மாணவியர்கள் என மொத்தம் 5,174 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 77.54% ஆகும். பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் வணிகவியல் பாடத்தில் 1, கணக்கு பதிவியல் பாடத்தில் 5, மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 3 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 9 மாணவ, மாணவியர்கள்100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் 14 மாணவ மாணவியர்கள் 551க்கு மேல் மதிப்பெண்களும், 69 மாணவ மாணவியர்கள் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 175 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.41 சதவீதத்துடன் முதலிடத்தையும், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 94.50 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 93.61 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

Related Stories: