மதுவால் சிதைந்து போன குடும்பம் குறித்து பிளஸ் 2 மாணவி வரைந்த விழிப்புணர்வு ஓவியம்-அனைவரும் பாராட்டு

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த தச்சு தொழிலாளி பாண்டியன் என்பவரின் மகள் கலையரசி.இவர் சீர்காழியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட கலையரசி விதவிதமான ஓவியங்களை வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அசத்தி வருகிறார்.பல விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வரும் அவர் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அதை காண்போர்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மதுவுக்கு அடிமையானதால் ஒரு குடும்பமே மது கோப்பை உடைந்து சிதறிக் கிடப்பது போல் சிதறி கிடப்பதை ஓவியமாக தீட்டி உள்ளார்.

குடும்பம் என்ற மது கோப்பை உடைந்து சிறு,சிறு கண்ணாடித் துண்டுகளாக ஒட்டுமொத்த குடும்பமே உடைந்து சிதறிக் கிடப்பதை விவரிக்கும் வகையில் கலையரசி வரைந்துள்ள ஓவியம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்த மாணவி கலையரசியை கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், கல்வி அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: