அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சிக்காக இலவசமாக தானியங்கள் வழங்க நடவடிக்கை: கோயில் பூசாரிகள் நலச்சங்கம் முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சிக்காக இலவசமாக தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் நலச்சங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் வாசு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய அம்மன் கோயில்களில் ஆடி மாதம் கூழ் வார்த்தல் நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது.

அதேசமயம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற கோயில்கள் மற்றும் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடைபெறும் அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் நிகழ்வுகளுக்கு போதிய தானியங்கள் கிடைப்பதில்லை, இக்கோயில்களில் தானியம் வாங்கும் அளவிற்கு போதிய வருவாய் இல்லாதது முதல் காரணமாகும். ஆடிமாதம் விரைவில் வரவிருப்பதைக் கருத்தில் கொண்டு துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற கோயில்கள் மட்டுமன்றி, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடைபெறும் அம்மன் கோயில்களுக்கும் கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற தானியங்களை விலையின்றி வழங்கி அந்த கோயில்களில் எல்லாம் கூழ்வார்த்தல் நிகழ்வு விமர்சையாக நடைபெற தமிழக முதல்வர்  கருணை உள்ளத்தோடு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: