மேற்கு திசை காற்று வேக மாறுபாடு தமிழகத்தில் 30ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் நேற்று மழை பெய்தது. அதிகபட்சமாக சின்னகல்லார் 50 மிமீ மழை பெய்துள்ளது. சின்கோனா, பந்தலூர் 30 மிமீ, சோலையாறு, வால்பாறை 20 மிமீ, சோழவரம், தேவாலா, அவலாஞ்சி, தாமரைப்பாக்கம், மேல் பவானி, குந்தா பாலம், செங்குன்றம், பொன்னேரியில் 10 மிமீ மழை பெய்துள்ளது. இதேநிலை நீடிக்கும் என்பதால் இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதற்கிடையே, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறியுள்ளதால், 30ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.

அத்துடன், குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக  கடலோர பகுதிகள், தென்மேற்கு  வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதனால் அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: