பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் தொண்டர்கள் நலனுக்கு வில்லன் ஓபிஎஸ்: உதயகுமார் சரமாரி தாக்கு

மதுரை: மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று அளித்த பேட்டி: ஒற்றைத்தலைமையான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்தால்தான் அதிமுக வளர்ச்சி பெறும். ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூடாது என அதிமுகவில் பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ். சசிகலாவுக்கு எதிராக அவர் வைத்த கோரிக்கையும், ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையையும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். பிறகு எதற்காக டிடிவி தினகரனோடு ஓபிஎஸ் ரகசிய உறவாடி பேசுகிறார். சந்தேகமற்ற அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும்.

தொண்டர்கள் என்ற புனிதச்சுமையை சுமப்பதற்கு ஓபிஎஸ் தயாராக இல்லை. தனது குடும்பத்தின் நலன் மீது மட்டுமே அவர் அக்கறை காட்டினார். இதுதான் அவர் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஓபிஎஸ் கட்சி நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து இருப்பார். பலமுறை பேச்சுவார்த்தைக்கு மூத்த தலைவர்கள் அழைத்தோம். ஆனால் அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை, நம்பியார் திரைப்படங்களில் வில்லனாக நடித்தார். ஆனால் உண்மையில் நல்லவர்.

ஓபிஎஸ் நல்லவராக இருந்தாலும், தொண்டர்களின் நலனில் முக்கியத்துவம் கொடுக்காமல் வில்லனாக உள்ளார். காவல்துறையிடம் பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று ஒரு தலைவர் கூறியது அதிமுக வரலாற்றிலேயே கிடையாது. அவரின் செயல் தொண்டர்களின் மனக்குமுறலாக வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. எடப்பாடியின் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: