இணையத்தில் வரும் 21ம் தேதி குடமுழுக்கு நடந்த கோயில்களின் விவரம் வெளியாகிறது: அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: கோயில்களில் குடமுழுக்கு நடந்த விவரங்கள் வரும் 21ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. எனவே, இது தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்க ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 45,993 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம். இதற்காக, கோயில் நிர்வாகம் சார்பில் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1000 கோயில்கள் வரை குடமுழுக்கு நடத்தப்படுகிறது. ஆனால், குடமுழுக்கு நடத்தப்படும் கோயில் விவரங்கள் பக்தர்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

இந்த  நிலையில், திருப்பணி மேற்கொள்வதற்காக குடமுழுக்கு நடைபெற்ற நாள், பாலாலயம் செய்யப்பட்ட நாள் மற்றும் விவரங்களை அதற்கான ஆவணங்களுடன் இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 45,993 கோயில்களுக்கு தற்போது திருப்பணிகள் மேற்கொள்வதற்காக குடமுழுக்கு நடந்து நாள், பாலாலயம் செய்யப்பட்ட நாள் மற்றும் விவரங்களை அதற்கான ஆவணங்களுடன் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக வலைதளம் வரும் 21ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்த வலைதளத்தில் அனைத்து கோயில்களுக்கும் பாலாலயம் மற்றும் குடமுழுக்கு நடந்த விவரங்கள் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

எனவே, அனைத்து கோயில் அலுவலர்களும் தங்கள் கட்டுபாட்டில் உள்ள பட்டியலில் சேர்ந்த மற்றும் சேராத கோயில்களுக்கு பாலாலயம் ெசய்யப்பட்ட நாள், குடமுழுக்கு நடைபெற்ற நாள், விவரம், அதற்கான ஆதார ஆவணங்களான அனுமதி உத்தரவுகள், குடமுழுக்கு அழைப்பிதழ், கோயில்களில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், புகைப்படங்கள் மற்றும் இதர ஆவணங்களை கோயில்களின் செயல் அலுவலர்கள் பெற்று தொகுத்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: