திமுக ஆட்சிக் காலம் கல்வியின் பொற்காலமாகத் திகழ வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்த ஆட்சிக் காலம் உயர்கல்வியின் ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாகத் திகழ  வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சி தனியார் கல்லூரி முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி ஆற்றிய உரை: கல்வி, படிப்பு, பட்டம் ஆகியவற்றைத் தாண்டிய தனித்திறமைகளும், பல்துறை அறிவாற்றலும் இருக்கக்கூடிய இளைஞர்களால் தான் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும், அதிக வளர்ச்சியை அடைய முடியும். அந்த நோக்கத்துக்காகத் தான் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை நம்முடைய தமிழக அரசு தொடங்கி இருக்கிறது.

இது என்னுடைய கனவுத் திட்டம். அதனால் தான் என்னுடைய பிறந்த நாளான மார்ச் 1 அன்று அந்தத் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் கல்வியில், அறிவாற்றலில், பன்முகத் திறமையில் முதல்வனாகத் திகழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டத் திட்டம் தான் “நான் முதல்வன்” என்கிற அந்தத் திட்டம்.  நேற்றைக்குக்கூட இந்தத் திட்டத்தினுடைய ஒரு பகுதியாக “கல்லூரிக் கனவு” என்கிற உயர் கல்வி வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை சென்னையில் நான் தொடங்கி வைத்தேன்.  

தொடர்ந்து மாநிலம் முழுவதும் அடுத்த சில நாட்களில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. பள்ளிக் கல்வியில் பெருந்தலைவர் காமராசர் காலமும், கல்லூரிக் கல்வியில் நம்முடைய கலைஞர் காலமும், சிறப்பாக விளங்கியதைப் போல, இந்த ஆட்சிக் காலம் உயர்கல்வியின் ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாகத் திகழ வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த இலக்கு நோக்கிய பயணத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். கல்லூரிக் கல்வியைத் தேடி வரும் இளைஞர்களை, பட்டதாரிகளாக மட்டுமல்ல, அறிவாளிகளாக, அறிவுக்கூர்மை கொண்டவர்களாக, பன்முகத் திறமை கொண்டவர்களாக, வளர்த்தெடுக்க நீங்கள் திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: