மரம் விழுந்து பெண் பலியான சம்பவம் விசாரணை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: மரம் விழுந்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 136க்கு உட்பட்ட லட்சுமணசாமி சாலை, பி.டி.ராஜன் சாலை சந்திப்பில் 50 ஆண்டு பழமையான சுமார் 5 அடி விட்டமுள்ள மரம் ஒன்று நேற்று முன் தினம் மாலை சுமார் 6 மணியளவில் சாய்ந்து, அந்த நேரம் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்துள்ளது. காரில் பயணித்த சுமார் 55 மதிக்கத்தக்க வாணி கபிலன் என்பவர் சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்துள்ளார்.

இந்த மரம் விழுந்த சம்பவ இடத்தில் கடந்த இரண்டு நாட்களாக மண் தோண்டும் பணி உட்பட எவ்வித மழைநீர் வடிகால் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 22ம் தேதியே பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளும் பொழுது மரம் இருப்பதன் காரணமாக 10 அடிக்கு முன்னதாகவே பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும், மண்ணின் ஈரத்தன்மை காரணமாகவும் பழமை வாய்ந்த இம்மரம் சாய்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள இந்திய ஆட்சிப் பணி நிலையில் உள்ள துணை ஆணையர் (பணிகள்) மற்றும் வட்டார துணை ஆணையர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: